ஜனாஸாவைப் பார்த்தால் என்ன ஓத வேண்டும்?
கேள்வி : ஜனாஸாவைப் பார்த்தால் என்ன ஓத வேண்டும்? பெண்கள் ஜியாரத் செய்யலாமா? விளக்கம் தாருங்கள். ரிzஜ்வானா ஹஸன், யாஹூ மின்னஞ்சல் வழியாக!
பதில் :
ஜனாஸாவைப் பார்த்தால் என்ன ஓத வேண்டும்?
1) ஒருவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டால்: –
إنا لله وإنا إليه راجعون
“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூற வேண்டும்.
பொருள் : நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். மேலும் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்
2) மரணித்த ஒருவருக்காக பிரார்த்தனை செய்யலாம். அபூ ஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் பின் வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
مسلم والبيهقي – اللهم اغفر لابي سلمة، وارفع درجته في المهديين، واخلفه في عقبه في الغابرين، واغفر لنا وله يا رب العالمين، وافسح له في قبره، ونور له فيه
“அல்லாஹும்மஃபிர் லிஅபீ ஸலமா வரஃப தரஜதஹு ஃபில் மஹ்திய்யீன், வஹ்லுப்ஹு ஃபீ உக்பிஹி ஃபில் (Gh)காபிரீன். வஃபிர்லனா வலஹு யாரப்பல் ஆலமீன். வஃப்ஸஹ்லஹு ஃபீ கப்ரிஹி வ நூருன் லஹு பீஹி”
3) ஜனாஸா தொழுகையில் பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ
مِنْ عَذَابِ النَّارِ) – رواه
مسلم
“அல்லாஹும் மஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸ்(z)லஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வஃக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வனக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ். வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஜவ்ஜிஹி. வஅத்கில்ஹுல் ஜன்னத்த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்”
பொருள் : இறைவா இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள் பாலிப்பாயாக. இவருக்கு நற்சுகம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது விருந்துபச்சாரத்தைக் கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது மனைவிக்குப் பகரமாக சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக.
ஜனாஸா தொழுகையில் ஓதக் கூடிய மற்றொரு துஆ: –
“அல்லாஹும் மஃக்பிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா வகாயிபினா வஸகிரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம் வமன் தவஃப் பைதஹு மின்னா ஃபத வஃப்பஹு அலல் ஈமான்”
பொருள் : இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.
இவைதான் ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவருக்காக நாம் செய்யக் கூடிய குறைந்த பட்ச பிரார்த்தனைகளாகும்.
பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் உள்ளன.
ஹதீஸ்-1 : “கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் சபித்தார்கள் (லஃனத்’ செய்தனர்)” – அறிவிப்வர்கள் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ , மற்றும் இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரங்கள் : திமிதி, இப்னுமாஜா, அஹ்மத், நஸயீ, அபூதாவுது மற்றும் இப்னு ஹிப்பான்.
ஹதீஸ்-2 : நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் சேர்ந்து (யாரையோ) நல்லடக்கம் செய்தோம். வேலை முடிந்து திரும்பும் போது ஒரு பெண்மணி எங்களை முன்னோக்கி வந்தார். அருகே நெருங்கிய போது (நபி صلى الله عليه وسلم அவர்களின் அன்பு மகளார்) பாத்திமா (ரழி) அவர்கள் தான் வந்து கொண்டிருந்தார்கள். “வீட்டைவிட்டு எங்கே புறப்பட்டு விட்டாய்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டனர்.
“இந்த மைய்யித்தின் குடும்பத்தினர் மீது அனுதாபப்பட்டேன். (அதனால் அங்கே சென்று ஆறுதல் கூறி வருகிறேன்) என்று பாத்திமா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
“நீ அவர்களுடன் கப்ருஸ்தானுக்குச் சென்றாயா?” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டனர்.
அதற்கு பாத்திமா (ரழி) அவர்கள் “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நீங்கள் இதுபற்றி எவ்வளவோ கூறியிருப்பதை நான் செவியேற்றிருக்கும் போது (நான் எப்படிக் கபுருஸ்தானுக்குப் போவேன்) என்று கூறினார்கள்.
நீ மட்டும் அவர்களுடன் கபுருக்குச் சென்றிருந்தால் உன் தந்தையின் பாட்டன் சுவனத்தைப் பார்க்கும் வரை சுவர்க்கத்தை நீயும் பார்க்க முடியாது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்வர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரங்கள் : அஹ்மது, நஸயீ, அபுதாவூது, இப்னு ஹிப்பான், ஹாகிம்.
மேலதிக விளக்கம் பெற பார்க்கவும் : கப்ரு ஜயாரத் செய்யும் பெண்கள்!