நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்கள் இன்று உலகில் அதிக அளவிவிலான எண்ணிக்கையில் இருந்தும் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருப்பதற்கு முக்கியமான ஒரே காரணம் நாம் இறைவனுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிகாட்டுதல்களை மறந்து விட்டு நமக்கு நாமே ஏறுப்படுத்திக் கொண்ட பிரிவுகள், கொள்கைகள், இயக்கங்கள், கட்சிகள் இவைகளின் பெயரால் நாம் அழைக்கப்படுவதை பெருமையாகக் கருதுவதேயாகும்.
உலகளவில் முஸ்லிம்கள் இழந்த கண்ணியத்தையும், வலிமையையும் திரும்பப் பெறுவதற்கு இஸ்லாமியர்களாகிய நாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதற்காக செய்ய வேண்டிய முதல் பணி என்னவெனில் மேற்கூறிய பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வதை விட்டுவிட்டு இறைவன் மற்றும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களாக பல்வேறு குழுக்களாக, பிரிவுகளாக, இயக்கங்களாக, கட்சிகளாக பிரிந்து கிடக்கும் நமது இஸ்லாமிய சகோதரர்களை ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒற்றுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்” (அல்-குர்ஆன் 22:77-78)
இன்று நம்மிடையே காணப்படும் பல்வேறு பிரிவுகளும், இயக்கங்களும், அமைப்புகளும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டவைகளாகும். இந்தப் பிரிவுகளின் அடிப்படையில் சிலர் தம்மை தவ்ஹீதுவாதி என்றும், சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவன் என்றும், அல்லது குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் மேலும் இதுபோல பலபிரிவுகளின் அல்லது இயக்கங்களின் பெயர்களிலும் தம்மை அழைப்பதில் பெருமைபட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மார்க்கத்தில் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணியவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் மட்டுமே சரியான பாதையில் இருப்பதாகவும் மற்ற பிரிவை அல்லது இயக்கத்தைச்ச் சேர்ந்தவர்கள் தவறான பாதையில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டு ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையில் நம்புகின்ற ஒருவர் இவ்வித பிரிவுகளில் பெருமை கொள்வதை விட்டு விட்டு இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய “முஸ்லிம்கள்” என்று கூறிக்கொள்வதையே விரும்ப வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே பிரிந்து சின்னாபின்னமாகியிருக்கும் முஸ்லிம்களை ஒன்று சேர்க்க முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்’ (என்றும் கூறினோம்). ஆனால், அச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்“ (அல்-குர்ஆன் 23:52-53)
ஒரு உண்மையான முஃமின், அல்லாஹ்வை மட்டுமே அழைத்து, பிரார்த்தித்து வணங்க வேண்டும் என்பதையும் அவனுக்கு யாதொரு இணை வைக்கக் கூடாது என்றும், அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களையே பின்பற்றி வாழ வேண்டும் என்பதையும் அனைத்து மத்ஹப்களும் வலியுறுத்துவதை நாம் அறியலாம். எனவே ஒருவர் உண்மையில் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுவதில் உறுதி கொண்டிருந்தால் அவரைப் பொறுத்தவரை எந்த மத்ஹபும், குர்ஆன் மற்றும் நபிவழியைப் பின்பற்றுவதில் அவருக்கு தடையாக இருக்காது.
எனவே எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நாம் ஒவ்வொருவரும் இஸ்லாத்தின் மிக மிக முக்கியமான அகீதா அடிப்படையிலான வேறுபாட்டைத் தவிர்த்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக பிரிந்து விடாமல், சிந்தித்து செயல்பட்டு, நாம் அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர முயற்சிக்க வேண்டும். அப்பொழுது இன்ஷா அல்லாஹ் நாம் இழந்த கண்ணியத்தையும் வலிமையையும் மீண்டும் பெறலாம்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.
நாம் அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர முயற்சிக்க வேண்டும்.
இன்றை பிரச்சனை என்ன வென்றால் பிரச்சனைகளை பற்றி மட்டும் பேசுவது, தீர்வை சொல்வதில்லை, முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் எப்படி ஒன்று சேர்வது அதற்க்கு யார் முன்னெடுப்பு செய்வது, அதை ஏன் விளக்கவில்லை? தீர்வை தராத கட்டுரையால் என்னப்பயன்?