அல்லாஹ் எங்கு இருக்கிறான்? – வஹ்தத்துல் உஜூத் வழிகேட்டுக் கொள்கைக்கு அல்குர்ஆனின் பதில்
வஹ்தத்துல் உஜூத் எனும் வழிகேட்டுக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள், ‘இறைவன் தூனிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்’ என்ற இவர்களின் துருப்பிடித்த வழிகேட்டு தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்!
அதனால் தான் அவர்கள் அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு மாறுபடும் விதத்தில் இறைவன் எல்லாப்பொருட்களிலும் இருக்கின்றதால் எல்லாமே இறைவன் தான் என்று பிதற்றிக்கொண்டு திரிகின்றனர்.
ஆனால் அல்லாஹ்வோ எல்லா படைப்புகளுக்கும் மேலாக ஏழு வானங்களுக்கும் மேலே தனது அர்ஷினில் இருப்பதாக அல்லாஹ்வின் அருள்மறையும் அவனது தூதரின் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் சான்று பகற்கின்றது!
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்“ (10:3)
“அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்” (20:5)
“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்“ (7:54)
“மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் ‘புராக்’ என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று ‘சித்ரத்துல் முன்தஹா’ என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள்.
(ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து – நூல்: முஸ்லிம்).
“பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான்.”
இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்
“ஒரு முறை நபி(ஸல்)அவர்களிடம் ஒரு அடிமைப் பெண்ணைக் கொண்டு வரப்பட்டது. அவளிடம்,
‘அல்லாஹ் எங்கே?(இருக்கிறான்)’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அவள் ‘வானத்தில்’ என்றாள்,
‘நான் யார்?’ எனக் கேட்டபோது,
‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர்’ என விடையளித்தாள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து,
‘அவளை விடுதலைச் செய்து விடுங்கள்! ஏனெனில் அவள் ஈமான் கொண்டவளாக இருக்கிறாள்’ என்றனர்.
(முஸ்லிம்)
திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் ‘அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான்’ என்பதை அறிந்து கொள்ள முடியும்.
திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே ‘அர்ஷில் அமைந்தான்‘ என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக் (ரஹ்) தாரமி.
பெரும்பான்மையான மக்கள் ‘இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான், காணும் இடத்திலெல்லாம் உள்ளான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்‘ என்றெல்லாம் கூறுவர்.
இக்கருத்துகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கையில் கோளாறு செய்வதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட கொள்கையாகும். இதை ஒரு உதாரணம் மூலம் மிகச் சுலபமாக விளங்கலாம்.
ஒரு சாப்பாட்டுப் பொருள் இருக்கிறது, தூணிலும், துரும்பிலும் இருந்தால் அந்த சாப்பாட்டிலும் இருக்க வேண்டும். அதை நாம் சாப்பிட்டு விடுகிறோம் மேலும் அதைக் கழித்தும் விடுகிறோம் தூணிலும், துரும்பிலும் இறைவன் இருந்தால் அப் பொருளிலும் இறைவன் இருக்க வேண்டும் இது எவ்வளவு விபரீதமான பொருளைக் கொடுக்கிறது என்பதைச் சிந்தித்து அக்கருத்திலிருந்து விடுபடுவதோடு திருமறையும், நபி மொழியும் போதித்தபடி நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். தவறான கருத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
‘அல்லாஹ் அர்ஷில் இருந்தாலும் அவனுடைய கண்காணிப்பால், ஞானத்தால் அகில உலகையும் சூழ்ந்துள்ளான்’ என்பதையும் திருமறை மற்றும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
வஹ்தத்துல் உஜூத் வழிகேட்டுக் கொள்கையாளர்களின் வரட்டு வாதத்திலிருந்து முஸ்லிம்கள் விலகியிருந்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.