யார் பெரும்பாவிகள்?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும்பாவிகள் ஆவார்கள்.
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்! மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
(அல்-குர்ஆன் 59:18-24)