கவாரிஜ்கள் என்போர் யார்? – சிறிய விளக்கம்
ஹவாரிஜ்கள் யார்?
ஸிஃப்ஃபீன் போருக்கு பின்னர் அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான் ஹவாரிஜுகள். அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென்ற கருத்தின் பால் நபித்தோழர்கள் சென்றபோது அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் தான் இவர்கள்.
அலீ(ரலி) அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இஸ்லாமிய பிரிவினர்களில் ஒரு பிரிவினர் தான் ஹவாரிஜுகள் ஆவார்கள். கலிஃபாக்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்குத் தான் பொதுவாக ஹவாரிஜுகள் என்று சொல்லப்படும். (பார்க்க: அல் முஃஜமுல் வஸீத் ஹரஜ என்ற சொல்)
ஹவாரிஜ் என்பதற்கு இமாம் ஷஹருஸ்தானி (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில், ஒன்றுபட்ட உண்மையான இஸ்லாமிய ஜமாஅத்தின் இமாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்கள் தான் என்று கூறினார்கள். (நூல்: அல் மிலல் வந்நிஹல் 1/113)
முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு விலகியிருப்பதற்கு அவர்கள் தீர்மானித்து அப்துல்லாஹ் பின் வாஹிப் அர்ராஸிபி என்பவனை அவர்களுடைய தலைவராகவும் தேர்ந்தேடுத்தார்கள். இன்னும் குர்ஆனுக்கு மாற்று விளக்கமளித்தார்கள். முஸ்லிம்களிடமிருந்து வெளியேறி சென்றார்கள். அவர்களின் வழிமுறைக்கும் கொள்கைக்கும் ஒத்திருக்கக்கூடியவர்களிடம் ஆள் அனுப்பி முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டினார்கள். அவர்கள் அனைவரும் நஹ்ருவான் என்ற இடத்தில் ஒன்று கூடினார்கள்.
இவர்களுக்கு வேறு சில பெயர்களும் உள்ளன:
1. அல் ஹரூரிய்யா (الحرورية) :
அலீ (ரலி) அவர்களின் படையை விட்டு பிறிந்து ஸிஃப்ஃபீன் போர்களத்திலிருந்து கூஃபாவை நோக்கி திரும்பிய பின்னர் ஹரூரா என்ற ஊரில் தங்கியதனால் இவர்கள் ஹரூரிய்யாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
2. அஷ்ஷுர்ராத் (الشراة)
அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதில் நாங்கள் எங்களை விற்று விட்டோம். அதாவது தங்களை சுவனத்திற்காக விற்றவர்கள் என்று அவர்கள் கூறியதனால் இவர்கள் அஷ்ஷுர்ராத் என்று அழைக்கப்பட்டார்கள்.
3. அல் முஹக்கிமத் (المحكمة):
அலீ (ரலி) மற்றும் முஆவியா (ரலி) ஆகியோருக்கு மத்தியிலான கருத்து வேறுபாட்டை தீர்த்து வைக்க அபூ மூஸா அல் அஷ் அரி (ரலி) மற்றும் அம்ரு பின் ஆஸ் (ரலி) ஆகிய இருவரையும் நீதிபதிகளாக ஆக்கினார்கள். இவர்கள் அவ்விருவரும் அளித்த தீர்ப்பையும் இரு நீதிபதிகளையும் நிராகரித்ததனால் இப்பெயர் சூட்டப்பட்டது.
4. அல் மாரிகா – வெளியேறிச்செல்பவர்கள் (المارقة):
இப்பெயர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றிலிருந்து பெறப்பட்டது.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை தழுவிய) நான்கு நபர்களுக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், ‘இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்’ என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் ‘நீங்கள் நீதி செய்யவில்லை’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவார்’ என்று கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 4667.
நபி வழிக்கும், நேர்வழி நடந்த கலீஃபாக்களின் வழிமுறைக்கும் முரணான ஹவாரிஜுகளின் கொள்கைகள்:
1. நபி (ஸல்) அவர்களை குறைகூறுவது, அவர்களை கண்டிப்பது, அவரின் பங்கீட்டை பொறுந்திக்கொள்ளாமல் இருப்பது.
துல் ஹுவைஸிராவின் சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
2. குர்ஆன் வசனங்களுக்கு தவறான விளக்கமளிப்பது.
3. பெரும்பாவம் செய்தவனை காஃபிராக்குவது, இன்னும் நிரந்தர நரகவாசி என்று தீர்ப்பளிப்பது.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாமிய சமுதாயத்தில் ஆரம்பத்தில் தோன்றிய பித்அத் ஹவாரிஜுகளால் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் ஆகும். அது அவர்கள் குர்ஆனை தவறாக விளங்கியதன் விளைவாகும். குர்ஆனுக்கு மாறு செய்யவேண்டுமென்று அவர்கள் நாடவில்லை. ஆனாலும் அவர்கள் அதனை தவறாக விளங்கிக் கொண்டார்கள். அதன் காரணமாக பெரும் பாவங்கள் செய்வோரை காஃபிராக்குவது கட்டாயம் என்று எண்ணினார்கள். முஃமினாக இருந்தால் இறையச்சமுடையவராகவும், நல்லவராகவும் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எண்ணினார்கள். யார் இறையச்சமுடையவராகவும், நல்லவராகவும் இருக்கவில்லையோ அவன் காஃபிராவான் இன்னும் நிரந்தர நரகவாசியும் ஆவான் என்று அவர்கள் கூறினார்கள். (மஜ்மூஉல் ஃபதாவா 13/30)
4. முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்புவது.
ஹவாரிஜுகள் கடுமையான போக்குடையவர்கள், கடினமானவர்கள் என்று வரலாற்றில் அறியப்பட்டவர்கள். இது அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாகும்.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ
முஹம்மது, அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார். அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். அல்குர்ஆன் 48:29
5. நியாயமின்றி முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதை அவர்கள் ஆகுமானதாக்கினார்கள்.
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அவர்களின் வழிமுறைக்கு உடன்படவில்லை என்பதாலும், அவர்களின் சிந்தனைக்கு முரண்பட்டார்கள் என்பதாலும் அல்லாஹ்வின் தூதரின் தோழரின் மகன் அப்துல்லாஹ் பின் கப்பாப் பின் அரத் அவர்களை கொலை செய்தார்கள்.
6. மக்களுக்கு மத்தியில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவது, இன்னும் பெண்கள் உட்பட குழந்தைகளை கொன்றுகுவிப்பது.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் கர்பிணிகளின் வயிற்றையும் கிழித்தார்கள். வேறு யாரும் செய்யாத செயலை அவர்கள் செய்தார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா 12/75)
7. உஸ்மான் (ரலி), அலீ (ரலி) போன்ற சில மூத்த ஸஹாபாக்களை காஃபிராக்கினார்கள்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹவாரிஜுகள் உஸ்மான் (ரலி), அலீ (ரலி) இன்னும் இவ்விருவருடனும் நேசம் பாராட்டியோர் முஃமின்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் அல்லாஹ் இறக்கிவைக்காத ஒன்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கினார்கள் என்று கூறினார்கள்.
அவர்களின் இந்த பித்அத்திற்க்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1. யார் ஒருவர் அவரது செயலாலோ, கருத்தாலோ குர்ஆனுக்கு முரண்படுவாரோ அல்லது அதில் தவறிழைப்பாரோ அவர் காஃபிராவார்.
2. உஸ்மான் (ரலி), அலீ (ரலி) அவர்களை நேசித்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
எனவே தவறுகளுக்காகவோ, பாவத்திற்காகவோ, முஃமீன்களை காஃபிர் ஆக்குவதை விட்டும் பேணுதலாக இருப்பது கட்டாயமாகும். இவைதான் இஸ்லாமில் தோன்றிய முதல் பித் அத் ஆகும். (மஜ்மூஉல் ஃபதாவா 13/31)
8. குறைஷி அல்லாதவர்கள் தலைமைத்துவம் ஏற்கலாம் என்று கூறி அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸ்களுக்கு முரண்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்’ என்று கூற கேட்டிருக்கிறேன் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3500
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3501
ஹவாரிஜுகளின் தோற்றம்:
ஹவாரிஜுகள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே தோன்றினார்கள் என்பதாக அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுடன் முரண்பட்ட துல் ஹுவைஸிரா என்பவன் தொடர்பாக வந்துள்ள பின்வரும் அறிவிப்புகளை கவனித்தால் நாம் விளங்கலாம்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரலி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும், அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மைவிட்டுவிடுகிறார்களே’ என்று கூறினார்கள்.
(இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘(புதிதாக இஸ்லாத்தை தழுவிய) அவர்கள் ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்’ என்றார்கள், அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ என்று சொன்னான். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைகுரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?’ என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அவனைக் கொன்றுவிட அனுமதி கேட்டார். அவர் காலித் இப்னு வலீத்(ரலி) என்றே கருதுகிறேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள்.
அந்த மனிதன் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆது’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்’ என்றார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி – 7432.
இந்த நபிமொழியில் கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தான் என்றும் அந்த மனிதனின் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டம் தோன்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது வேறு அறிவிப்பில் அவனது பெயர் துல்ஹுவைஸிரா என்றும் கூறப்பட்டுள்ளது.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த, ‘துல்ஹுவைஸிரா’ எனும் மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் நீதியுடன் நடந்து கொள்ள வில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்?’ என்று கூறினார்கள். உடனே (அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், ‘இவரின் கழுத்தைக் கொய்ய என்னை அனுமதியுங்கள் (இறைத்தூதர் அவர்களே!)’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை, (இவரை விட்டு விடுங்கள்). நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டு, உங்களின் தொழுகையையும், நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு) அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும் வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதை போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று அறிய) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது.
பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும் அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் கிடைக்காது. அ(ம்பான)து, சானத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் கிளம்புவார்கள். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் இரண்டு (புறக்) கைகளில் ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்” என்றார்கள்.
நான் நிச்சயமாக இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போரிட்டபோது அலீ (ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். (அந்தப் போரில்) கொல்லப்பட்டவர்களிடையே (நபி(ஸல்) அவர்கள் இனங்காட்டிய) அந்த மனிதரைத் தேடிக் (கண்டுபிடித்துக்) கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருந்தார் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். நூல்: ஸஹீஹுல் புஹாரி – 6163.
அவனது கூட்டத்தார்கள் தான் ஹவாரிஜுகள் என்பதையும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், ‘ஹவாரிஜு கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள். இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலை துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி – 6934.
ஹவாரிஜுகள் தொடர்பாக ஏராளமான ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளது. அதில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதில் அவர்களின் வழிகேடும் மோசமான தன்மைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வழிகேட்டிற்கு அவர்கள் சத்தியத்தையும், நேர்வழியையும் விட்டு தூரமானார்கள் என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நபி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும். அறிவிப்பாளர்: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1938
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கிழக்கு திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள் என்பதற்கு விளக்கமளிக்கையில், அவர்கள் நேர்வழியை விட்டும் சத்தியத்தை விட்டும் தூரமாகச் சென்றவர்கள் என்பதாக கூறினார்கள். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 7/175)
அவர்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள். சிலை வணங்கிகளை விட்டுவிடுவார்கள் என்பதும் அவர்களின் இழிவான பண்புகளில் ஒன்றாகும். நூல்: ஸஹீஹுல் புஹாரி – 3344
– அஷ்ஷெய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி
நன்றி: islamiyapuram.blogspot.com