அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்?
அகிலங்களின் ஏக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது!
நாம் எங்கிருந்துக் கொண்டு பிரார்த்தித்தாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும், ஒரே நேரத்தில் எத்தனை பேர்கள் அழைத்துப் பிரார்த்திதாலும், எத்தனை தூரத்திலிருந்து அழைத்தாலும் நம் அனைவர்களின் அழைப்பும் ஏற்று நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உண்டு!
ஒரே நேரத்தில் அனைவரின் அழைப்பையும் ஏற்று அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை! அவ்வாறு இந்த ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவது ஷிர்குல் அக்பர் எனப்படும் மாபெரும் இணைவைப்பாகும்!
பிரார்த்தனை ஒரு சிறந்த வணக்கமாகும்! இந்த வணக்கத்தை அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி
அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும் என்பது அவனுடைய கட்டளை!
“உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல் குர்ஆன் 40:60)
அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தனை செய்தால் அவனுடைய நேர்வழி கிட்டும்!
“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக.” (அல் குர்ஆன் 2:186)
அல்லாஹ் அல்லாத நபி (ஸல்) அவர்களையோ அல்லது அவுலியாக்களாக கருததப்படக் கூடிய மரணித்து விட்டவர்களையோ அல்லது சூஃபி செய்குமார்களையோ அழைத்தால் அவர்களால் உங்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் தரமுடியாது என்பது இறைவனின் எச்சரிக்கை!
“உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.” (அல் குர்ஆன் 13:14)
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள் வழிகேடர்கள் என்று இறைவன் எச்சரிக்கின்றான்!
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.” (அல் குர்ஆன் 46:5)
அல்லாஹ் அல்லாத யாரை நீங்கள் அவுலியாக்கள் எனவும் அவர்கள் நமக்கு உதவுவார்கள் எனவும் பிரார்த்தித்து அழைத்தீர்களோ அவர்கள் மறுமையில் உங்களை கைவிட்டு விடுவார்கள்! அதனால் நீங்கள் பெரும் கைசேதத்திற்குள்ளாக நேரிடும்!
“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல் குர்ஆன் 35:14)
இவ்வுலகில் அல்லாஹ் அல்லாதவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தவர்களிடம் மறுமையில் அவர்களை நோக்கி அழையுங்கள் என கட்டளையிடப்படும்! இவர்களும் அவர்களை அழைப்பார்கள்! ஆனால் அவர்களால் இவர்களுக்கு பதிலளிக்க இயலாது!
அல்லாஹ்வின் கட்டளையையும் எச்சரிக்களையும் மீறி அவனது அடியார்களிடம் பிரார்த்தனை செய்தவர்கள் மறுமையில் இழிவுபடுத்தப்பட்டவர்களாக நரகில் தண்டிக்கப்படுவார்கள்!
“‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).” (அல் குர்ஆன் 28:64)
“‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.” (அல் குர்ஆன் 18:52)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
- பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே!
- அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்!
- அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது!
- அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்!
- அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்கள் வழிகேடர்கள்!
- கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது!
- கியாம நாளில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்!
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில், ‘ஒருவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே’ என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதற்கு மாற்றமாக, ‘நபி (ஸல்) அவர்களோ அல்லது மக்களில் பலரால் அவுலியாக்கள் எனப் போற்றப்படுபவர்களோ நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார்’ என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் மாபெரும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்:
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )