இறைவனை மறுப்பவர்களுக்கு இறைவனின் உதாரணங்கள்

அகிலங்களின் ஏக இறைவன் கூறுகின்றான்:

“இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்” (அல்-குர்ஆன் 39:27)

“இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 18:54)

“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, ‘இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?’ என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள் ” (அல்-குர்ஆன் 2:26-27)

மூதாதையர்களின் மடமையை கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்!

“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:170-171)

இறைவனின் திருவசனங்களைப் பொய்ப்பிப்பவனின் உதாரணம் நாயைப் போன்றது!

“(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் – அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்” (அல்-குர்ஆன் 7:175-177)

மறுமை வாழ்வை நிராகரிப்பவர்கள் குருடர், செவிடர், ஊமையர் போன்றவர்களாவார்கள்!

“அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; ‘இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்’ என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் – இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் – இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள். இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (அல்-குர்ஆன் 11:18-24)

“(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், ”மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?’ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல!) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, ‘நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, ‘நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்’ எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர். இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:13-19)

இணை வைப்போரின் கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்!

“(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை” (அல்-குர்ஆன் 14:24-26)

இரு வகை மனிதர்களின் உதாரணங்கள்!

“அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) – என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை. (அல்-குர்ஆன் 16:75)

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் – இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?” (அல்-குர்ஆன் 16:76)

” இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும், ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 39:27-29)

ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பானவர்கள்!

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்” (அல்-குர்ஆன் 62:5)

ஏக இறைவனையல்லாது ஏனையோர்களைப் பிரார்த்திப்பவர்களின் உதாரணம்!

“உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை” (அல்-குர்ஆன் 13:14)

அல்லாஹ்வையன்றி உங்களால் பிரார்த்திக்கப்படுபவர்களால் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது!

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது! இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே” (அல்-குர்ஆன் 22:73)

அல்லாஹ்வையல்லாத வேறுபாதுகாவலர்களின் பலஹீனம் சிலந்திப்பூச்சியின் வீட்டைப் போன்றதாகும்!

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 29:41-43)

இறை நிராகரிப்பாளர்களின் செயல்கள் சாம்பலுக்கு ஒப்பாகும்!

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது: அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை: புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது! இதுவே வெகு தூரமான வழிகேடாகும்” (அல்-குர்ஆன் 14:18)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *