முஸ்லிம்கள் அழைப்புப் பணி செய்ய வேண்டிய அவசியம் ஏன்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.

சமீபத்தில் தன் வேலை நிமித்தமாக சவூதி அரேபியாவிற்கு வருகை தந்த ஒரு மின்னனு பொறியாளரை, அவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர் என்பதைக் கேள்வியுற்று அவரிடம் பேட்டி கண்டோம். அவர் கூறிய விஷயங்கள் ஒரு முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்து வளர்ந்த நம்மை வெட்கப்பட வைத்தது. மேலும் இதைப் படிக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் தம்மைத் தாமே சீர்தூக்கிப் பார்த்து சரி செய்ய இந்த பேட்டி உதவும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த சகோதரரிடம் கேட்ட பல கேள்விகளில் சிலவற்றை  நமது சுவனத்தென்றல் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

கேள்வி: –

முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி எங்கு, எப்படி தெரிந்துக் கொண்டீர்கள்?

பதில்:-

நான் பிறந்து வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் 18 ஆண்டுகளாக வசித்தது ஒரு இஸ்லாமிய அரபு நாட்டில். ஆனால் அந்த 18 ஆண்டுகளில் இஸ்லாம் என்றால் என்ன? என்று கூட இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவனாக இருந்தேன், என்னுடன் எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் படித்தும் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே என்னிடம் கூறியது கிடையாது.

பின்னர் நான், கல்லூரிப் படிப்புக்காக இந்தியாவிற்குப் சென்றிருந்த போது அங்குள்ள சில முஸ்லிம் மாணவர்கள், என்னிடம் கடவுளுக்கு எப்படி மகன் இருக்க முடியும் என்றும் பைபிளில் காணப்படும் சில தவறுகளையும் சுட்டிக் காட்டினர். பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்த நான் பைபிளை நன்றாகப் படித்திருந்ததன் காரணமாக என்னிடம் கேள்வி கேட்ட முஸ்லிம் மாணவ நண்பர்களிடம் தக்க பதில் கொடுத்து விட்டேன்.

ஆனால் நான் தங்குமிடத்திற்கு வந்ததும், இஸ்லாமிய அடிப்படை அறிவு மட்டுமே உடைய அந்த எளிய மாணவர்கள் கேட்ட கேள்விகள் என்னைக் குடைந்தெடுத்தது. “அந்த முஸ்லிம் மாணவர்களுக்கு நான் கூறிய பதில் சரிதானா” என்று என்னிடமே நான் பல முறைக் கேட்டுக் கொண்டேன்.

நான் இவ்வாறு குழம்பிக் கொண்டிருந்த வேளையில், ஷேக் அஹ்மத் தீதாத் மற்றும் டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களின் உரையைக் கேட்டு விட்டு வந்து அந்த முஸ்லிம் மாணவர்கள் பைபிளைப் பற்றி என்னிடம் மேலும் பல கேள்விகள் கேட்டனர். அப்போதைய சூழ்நிலையில் ஏதேதோ நான் பதிலளித்து விட்ட போதிலும், நான்கு வருடங்கள் படித்து முடித்து விட்டு அந்தக் கல்லுரியை விட்டு வெளி வரும் வேளையில், மிகவும் குழப்பமான மன நிலையில் வெளி வந்தேன்!

பின்னர் மேற்படிப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடொன்றுக்கு சென்றிருந்த போது என் மதத்தைக் குறித்துக் கேள்வி கேட்ட மாணவர்களின் மதமான இஸ்லாத்தைப் பழி வாங்குவதற்காக, அதில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று ஆராயத் துவங்கினேன்.

அதற்காக இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடிய வலை தளங்களைப் பார்வையிட்டேன். அதில் கூறப்படக் கூடிய விமர்சனங்களுக்கு முஸ்லீம்களின் பதிலைத் தேடிய போது அவர்கள் கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருந்தது. மேலும் மேலும் அவர்கள் கூறிய தவறுகள் குர்ஆனில் இருக்கிறதா என்று தேடியபோது அதுவும் தவறுகளில்லாமல் இருப்பதைக் கண்டேன்.

உதாரணமாக, கிறிஸ்தவ மிஷனரிகளால் குர்ஆன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஒன்று “வானம்-பூமியைப் படைத்த நாட்களின் எண்ணிக்கையில் குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது என்று, குர்ஆனில் ஒரு இடத்தில் வானம்-பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் வேறு இடத்தில் 2 நாட்களில் படைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இது முரண்படுகிறது என்பதாக விமர்சிக்கின்றனர்.

ஆனால் இது குறித்து குர்ஆனில் நான் தேடியபோது கிறிஸ்தவர்கள் விமர்சிப்பது ஆதாரமற்றது, குர்ஆனில் அது போன்ற முரண்பாடுகள் இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும் குர்ஆனைப் படிக்கும் போது நான் இந்தியாவில் கல்லுரியில் படிக்கின்ற போது கிறிஸ்தவ மதத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயங்கள் அனைத்திற்கும் குர்ஆனில் விடை கிடைத்தது. எனவே இஸ்லாம் மார்க்கமே நேரான மார்க்கமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்”

இவ்வாறு அந்த பொறியாளர் பதில் கூறினார்.

நாம் அவரிடம் கேட்ட மற்றொரு கேள்வி: –

முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்த முஸ்லிம்களுக்கு தங்களுடைய ஆலோசனை என்ன?

அவருடைய பதில்: –

“நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றியும், உலக முஸ்லிம்ககளின் நிலையைப் பற்றியும் ஒன்றுமே அறியாதிருந்ததைப் போல் எண்ணற்ற கிறிஸ்தவ மற்றும் மாற்றுமத சகோதரர்கள் இருக்கின்றார்கள்.

உதாரணமாக! பாலஸ்தீனத்தை எடுத்துக் கொண்டால் மீடியா என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் நம்பி வந்தேன், பாலஸ்தீனம் பற்றிய உண்மையான நிலைப்பாட்டை முஸ்லிம்களிடமிருந்தோ அல்லது முஸ்லிம் செய்தி ஊடக வழியாகவோ எங்களுக்கு யாரும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லது அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு அமையவில்லை. முழு தவறும் பாலஸ்தீனர்களிடமே உள்ளது என்ற மீடியா குற்றச்சாட்டையே நான் நம்மி வந்தேன். அது போலவே இஸ்லாம் பற்றிய உலக மீடியாக்களின் விமர்சனங்களையும் உண்மை என்று நம்பி வந்தேன்.

எனவே இது போன்ற எண்ணங்களில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ மற்றும் மாற்றுமத சகோதரர்களின் சந்தேகங்களை நீக்கி அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், உலக முஸ்லீம்களின் உண்மை நிலைப்பாட்டையும் எடுத்துரைக்க வேண்டியது முஸ்லிமான நம் அனைவர் மீதும் இருக்கின்ற முக்கியமான பொறுப்பாகும்”  என்று அந்த பொறியாளர் கூறினார்.

என தருமை சகோதர, சகோதரிகளே! இந்த புதிய இஸ்லாமிய சகோதரரின் பதிலிலே முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றது.

1) நம்மில் பலர் பிறப்பால், நாம் முஸ்லிம்களாக இருக்குறோமேயல்லாது குர்ஆன் என்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு அருள்மறை என்பதை அது கூறும் அறிவியல் அற்புதங்களை ஆராய்ந்து அறிவதில்லை.

2) நம்மில் பலர் குர்ஆனை பொருளறியாமல் ஓதுகிறோம், மேலும் நமது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் கூலிக்கு ஆட்களை அமர்த்தி 7 ஆம் நாள், 40 ஆம் நாள், 6 மாத, 1 வருட பாத்திஹாக்களில் ஓதுவதற்காக குர்ஆனை பயன்படுத்துகிறோமே தவிர அது ஓரு நேர்வழி காட்டும் அருள்மறை என்பதை உணர்வதில்லை.

3) பிறப்பால் முஸ்லிம்களாகிய நம்மிடமே சத்திய இஸ்லாத்தினை போதித்துக் கொண்டுடிருக்கிறோம்.  மேற்கண்ட பேட்டியில் கூறப்பட்ட சகோதரர்களைப் போல் என்ணற்ற மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவ இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மகத்துவம் என்ன? உலக மீடியாக்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பரப்பும் எல்லாம் வெறும் பொய்யான செய்திகளே! என்பதைப் பற்றி முஸ்லிம்களாகிய நம்மால் அவர்களுக்கு முறைப்படி எடுத்துச் சொல்லப்படவில்லை என்பதை நாம் உணர்வதில்லை. .

4) குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பொருளுனர்ந்து படித்து மாற்று மத சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும், பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கின்ற வகையில் நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.

5) இவை அனைத்தையும் விட தஃவா பணி என்பது முஸ்லிமான நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பு ஆகும்.

6) நாம் நமது பணியிடங்களிலோ அல்லது நாம் படிக்கும் கல்லூயிலோ அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களிலோ இருக்கக் கூடிய மாற்று மத சகோதரார்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது ஏற்படக்கூடிய ஐயங்களை நீக்க முயற்சிக்க வேண்டும். இறைவன் நாடினால் அவர்களுக்கு ஹதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுவான்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மன வலிமையையும் முஸ்லிமான நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *