சாட்சிகளில் பெண்களுக்கு ஏன் சமத்துவம் இல்லை?
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 16
பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
பதில்:
இஸ்லாத்தில் எல்லா வேளைகளிலும் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது உண்மையானது அல்ல. ஒரு சில வேளைகளில் மாத்திரம் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றிய விளக்கமளிக்கிறது. மேற்படி வசனங்களில் சாட்சிகள் பற்றி குறிப்பிடும்பொழுது -ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக சாட்சிகள் என்று மட்டும் குறிப்பிடுகிறது. மேற்படி ஐந்து வசனங்களில் உள்ள ஒரேயொரு வசனம் மாத்திரம் சாட்சிகளில் ஆண் என்றால் ஒருவர் என்றும் பெண் என்றால் இருவர் என்றும் குறிப்பிட்டு காட்டுகின்றது. அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 282வது வசனம் மேற்படி சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் மிக நீண்ட இந்த வசனம் பொருளாதார நடவடிக்கை பற்றி குறிப்பிடுகின்றது.
‘(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர் ஏனென்றால்) அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.’ அல்-குர்ஆன்(2:184)
மேற்படி வசனம் பொருளாதார கொடுக்கல், வாங்கல் பற்றி அறிவிக்கிறது. பொருளாதார கொடுக்கல் வாங்கலின் போது ஒப்பந்தம் இடச் சொல்கிறது. அவ்வாறு ஒப்பந்தம் இடும்போது கொடுப்பவருக்கும் – வாங்குபவருக்கும் இடையில் இரண்டு நபர்களை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள் என் கட்டளையிடுகிறது. இரண்டு சாட்சிகளும் ஆண்களாக இருந்தால் நன்று என்று பரிந்துரைக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சியாக கிடைக்கவில்லையெனில், ஒரு ஆண் சாட்சியையும் இரண்டு பெண் சாட்சிகளையும் கொண்டு ஒப்பந்தம் இடுங்கள் என்று மேற்படி வசனம் மனிதர்களுக்கு அறிவுறுத்துகிறது.
உதாரணத்திற்கு – ஒரு மனிதர் தனது நோய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்கிறார் எனில் – மேற்படி அறுவை சிகிச்சை பற்றி உரப்பித்துக் கொள்வதற்காக அவர் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களை கலந்து ஆலோசிக்கலாம்.. அல்லது அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைக்கவில்லையெனில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரையும், இரண்டு சாதாரண மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதில் அவர் திருப்தி அடையலாம்.
அது போலவே பொருளாதார கொடுக்கல், வாங்கலின் போது இஸ்லாம் இரண்டு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளச் சொல்கிறது. ஏனnனில் ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் பொருளாதார ரீதியாக அதிகம் பொறுப்புடையவர்கள். பொருளாதார ரீதியாக ஆண்கள் அதிகம் பொறுப்புடையவர்கள் என்பதாலும், பெண்கள் மிகக் குறைவான பொறுப்புடையவர்கள் என்பதாலும் ஆண்கள் என்னும் பட்சத்தில் ஒருவரும், பெண்கள் என்னும் பட்சத்தில் இரண்டு பேரும் சாட்சியமாவது அவசியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இரண்டு பெண்கள் ஏனெனில் – பெண்களில் ஒருவர் தவறிழைத்து விட்டால், மற்றவர் அதனை சரிசெய்யலாம் என்ற காரணத்தால்தான் இரண்டு பெண்கள் சாட்சிகளாக தேவைப்படுகின்றனர். மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டள்ள ‘தஷில்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘குழப்பம்’ அல்லது ‘தவறு’ என்று பொருள். ஆனால் மேற்படி ‘தஷில்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘மறதி’ என்று தவறான மொழியாக்கம் செய்துள்ளனர் பலர். மேற்படி ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார கொடுக்கல் – வாங்கல் சமடபந்தப்பட்டதற்கு மாத்திரமேத் தவிர, மற்ற இடங்களில் அல்ல.
தவிர, சில மார்க்க அறிஞர்கள் கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மேற்படி ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் – பயம் என்று வரும்போது, ஆண்களை விட பெண்கள் அதிகம் பயப்படும் தன்மை கொண்டவர்கள். பெண்கள் அதிகமாக பயப்படும் காரணத்தால் சாட்சி சொல்லும்போது, குழப்பமடைய நேரிடலாம். எனவே கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஆண் எனில் ஒருவரும், பெண் எனில் இரண்டு பேரும் சாட்சியாக இருக்க வேண்டுமென சில மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்படி விவகாரங்கள் தவிர – எஞ்சியுள்ள அனைத்து விவகாரங்களிலும் சாட்சி சொல்வதில் ஆண் – பெண் இருவருக்கும் சமமான நிலையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. மேற்படி ஐந்து வசனமும் ஆண் – பெண் என்று வித்தியாசம் குறிப்பிடாமல் – சாட்சிகள் என்று மாத்திரம்தான் குறிப்பிடுகின்றது.
சொத்துக்கான உயில் எழுதும்போது – இரண்டு நபர்களை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
‘நம்பிக்கை கொண்டவர்களே!. உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸணம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்: அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்.’ (அல்-குர்ஆன் 5:106)
விவாகரத்து செய்ய விரும்பினால் உங்களில் இரண்டு பேர் சாட்சியாக இருக்கட்டும் என்று அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துத் தலாக்கின் இரண்டாவது வசனம் கூறுகின்றது. (அல்-குர்ஆன் 65:2)
‘எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்’ என்று அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் நான்காவது வசனம் கூறுகின்றது.
தவிர, சில மார்க்க அறிஞர்கள் எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். மேற்படி வாதம் சரியானதன்று. ஏனெனில் அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் ஆறாவது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
‘எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவன் நிச்சயமாக உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் நான்கு முறை சத்தியம் செய்து கூற வேண்டும்.’ (அல்-குர்ஆன் 24:6).
மேற்படி வசனங்களில் எல்லா இடங்களிலும் சாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதே தவிர, ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் என்று குறிப்பிடப்படவில்லை. மேற்படி வசனத்திலிருந்து பெண்களையும் தனி நபர் சாட்சியாக ஏற்கலாம் என்பது நமக்குத் தெளிவாவதுடன், எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்போரின் வாதமும் அடிபட்டு போய்விடுகின்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:
இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்பினை நோற்பதற்காக பிறை பார்த்தல் சம்பந்தமாக ஒரு பெண்மணியின் சாட்சி போதுமானது என்பதை அனைத்து மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். சில மார்க்க அறிஞர்கள் நோன்பினை நோற்பதற்காக பிறை பார்க்கும்போது ஒரு சாட்சியும், நோன்பு நோற்று முடிந்து, பெருநாள் கொண்டாடுவதற்காக பிறை பார்க்கும்போது இரண்டு சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். மேற்படி செய்தியிலும் சாட்சி பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதேத் தவிர, ஆண் சாட்சி அல்லது பெண் சாட்சி என்று குறிபிடப்படவில்லை.
மேலும் சில விவாகரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான – இறந்து போன பெண் மையங்களை குளிப்பாட்டுவது – போன்ற விரகாரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி விவகாரங்களில் ஆண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
கேள்வி கேட்டவர் சொன்னது போன்று பொருளாதார விவகாரங்களில் மாத்திரம் ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை வைத்துள்ளது. மேற்படி நிபந்தனை கூட ஏனெனில் இஸ்லாமிய சமுதாயத்தில் – பெண்களுக்கும் – ஆண்களுக்கும் பொருளாதார ரீதியாக இஸ்லாம் வழங்கியுள்ள பொறுப்புக்களின் காரணமாகத்தானேத் தவிர, ஆண் – பெண் என்கிற பாலியல் வேறுபாடு காரணம் அல்ல. மற்றபடி அனைத்து விவகாரங்களிலும் சாட்சியமளிப்பதில் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமான உரிமையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா