ரமலானின் சிறப்புகள்: அல்-குர்ஆன் அருளப்பட்ட மாதம் (அல்-குர்ஆன் 2:186) சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன (புகாரி 1898, முஸ்லிம் 1956) நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன (புகாரி 1899, முஸ்லிம் 1957) அருள்களின் வாயில்கள் திறக்கப்படுகின்றன (நஸயீ) ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் (புகாரி 1899, முஸ்லிம் 1957) ரமானின் ஒவ்வொரு இரவிலும் பலர் நரகிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் (திர்மிதி – 618, இப்னுமாஜா 1642) ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கத்ர் ஐ உடைய மாதம் (புகாரி 2017) ரமலான் மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும் (நஸயீ) ஒரு இறை அழைப்பாளர், “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் (திர்மிதீ, இப்னுமாஜா) நோன்பின் சிறப்புகள் நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சமுடையோர் ஆகலாம் (அல்-குர்ஆன் 2:183) அல்லாஹ்வின் மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் கிடைக்கும் (அல்-குர்ஆன் 33:35) நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் (புகாரி 1894) ஒரு நாள் நோன்பு நோற்பது நரகத்தை விட்டும் எழுபது வருடங்கள் தூரமாக்கும் (முஸ்லிம் 2122, நஸயி 2248) நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் (புகாரி 1894) நோன்பாளிகள் “ரய்யான்” எனும் வாசல் வழியாக சுவர்க்கத்தில் நுழைவார்கள் (புகாரி 1896, முஸ்லிம் 2121) நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (புகாரி 1901, முஸ்லிம் 1393) நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும் (அஹ்மது) நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது செய்யும் துஆ நிராகரிக்கப்படாது (திர்மிதி 3668, இப்னுமாஜா) நோன்பு கடமையனவர்கள், விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். (திருக்குர்ஆன் 2:184, 185) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். சில நாட்களில் நீங்கிவிடும் நோயாக இருந்தால், நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:184) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:184) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண், நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால், நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். (நஸயீ 2276) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு, விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.(முஸ்லிம் 508) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோற்க வேண்டும். நோன்பை முறிக்கும் செயல்கள் உடலுறவு கொள்வது (புகாரி) உண்பது, பருகுவது (புகாரி) புகைபிடிப்பது (இச்செயல் ஹராமனது) மருந்து, மாத்திரைகளை உட்கொள்வது ஒரு பெண்ணுக்கு நோன்பு வைத்த நிலையில் மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் அவளின் நோன்பு அந்த நிமிடமே முறிந்து விடும் (முஸ்லிம் 560) நோன்பை முறிக்காதவைகள் மறதியில் உண்ணுவது, பருகுவது (புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா) தூக்கத்தில் விந்து வெளியேறுவது (சுய இன்பம் மூலம் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடும்) குளிப்பது (அஹ்மது 22107, அபூதாவூது 2359, நஸயீ) பல் துலக்குவது (புகாரி, அபூதாவூது, திர்மிதி) வாய் கொப்பளிப்பது (புகாரி 1911, இப்னுமாஜா 405) எச்சிலை விழுங்குவது நகம் வெட்டுவது நறுமணம், வாசனை திரவியங்கள் தடவுவது உணவை ருசிப்பார்ப்பது (விழுங்காமல் துப்பிவிட வேண்டும்) வேண்டுமென்றே இல்லாமல் தானாக வாந்தி வருவது (அஹ்மது, அபூதாவுது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஙிப்பான், தாரகுத்னி, ஹாகிம்) ஊசி போட்டுக்கொள்வது (சத்தூசி போட்டுக்கொள்ளக் கூடாது) காயங்களுக்கு மருந்து தடவுதல், பல் பிடுங்குதல் கண், காது, மூக்கு போன்றவற்றுக்கு சொட்டு மருந்து இடுதல். (மருந்து தொண்டையை அடையும் எனக் கருதினால் நோன்பு திறக்கும் வரை தவிர்த்தல் நலம்) இரத்த தானம் செய்வது (புகாரி 1939, 1940) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம் என்று விடையளித்தார்கள். (புகாரி 1940) உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மனைவியை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது (புகாரி 1928) “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.” (புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா) “நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.” அபூதாவூத் 2039 உணர்களை கட்டுப்படுத்திக் கொள்ளும் முதியவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியை முத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இதில் தவறிழைப்பது கடும் தண்டணைக்குரியதானதால் இளைஞர்கள் தவிர்ந்திருப்பது பேணுதலாகும். நோன்பாளிகள் செய்ய வேண்டியவைகள் சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு திறப்பது (திர்மிதி : 635) பேரீத்தப்பபழம் கொண்டு நோன்பு திறப்பது; இல்லையெனில் தண்ணீர் கொண்டு திறப்பது (திர்மிதி 631) நோன்பு திறக்க பிறருக்கு உதவுவது (திர்மிதி) ஸஹர் உணவை தவிர்க்காமல் உண்ணுவது (இதில் பரக்கத் இருக்கிறது) (நஸயீ) வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடவேண்டும் அல்-குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால் அதிகமாக குர்ஆனை ஓதுவது! அதிலும் பொருளறிந்து ஓதுவது சிறந்தது! அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத்தேடி, பெற்றுக் கொள்ளவேண்டும். நோன்பாளிகள் தவிர்க்க வேண்டியவைகள் பொய்யான பேச்சுகளில் ஈடுபடுதல் நோன்பை பலனற்றதாக்கிவிடும் (புகாரி 1903, அபூதாவூது 2355) நோன்பிருப்பவர் கெட்ட பேச்சு, கூச்சலிட்டு சச்சரவு செய்வது கூடாது (புகாரி 1904, முஸ்லிம் 2118, அபூதாவூது 2356) யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் “நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி” என்று கூறிக்கொள்ளட்டும் (புகாரி) இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது (புகாரி) பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும். நோன்பு குறித்த தவறான, பித்அத்தான செயல்கள் ஃபஜ்ருடைய நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே ஸஹர் முடிவு என அறிவித்தல் (ஃபஜ்ருடைய பாங்கு வரை ஸஹர் உணவு சாப்பிடலாம்) (அல்-குர்ஆன் 2:187) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத நவய்த்து எனத் தொடங்கும் வாசகத்தை நோன்பின் நிய்யத் என வாயால் மொழிதல் (நிய்யத் என்பதை உள்ளத்தால் நினைப்பது தான்! வாயால் மொழிவது அல்ல) சூரியன் மறைந்த பின்பும் ஐந்து நிமிடங்கள் தாமதித்து பிறகு நோன்பு திறப்பது (ஹனபி மத்ஹபினர்கள் இத்தகைய தவறு செய்கின்றனர்) தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட, விடி ஸஹர் என்ற பெயரில் சாப்பிடுதல் (இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்) ரமலானில் நோன்பு நோற்காதவரின் நிலை இறையருளைவிட்டும் வெகு தூரமாக்கப்படுவார் (ஹாகிம்) ரமலானில் நோன்பு நோற்பது இறைக் கட்டளை. நோன்பு நோற்காதவர் இறைக் கட்டளையை மீறியவராவார். (அல்-குர்ஆன் 2:183) ரமலான் நோன்பு குறித்த பிற தகவல்கள் நோன்பின் இரவுகளில் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது (அல்-குர்ஆன் 2:187) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் உணவு உட்கொள்ளலாம் (ஃபஜ்ரு தொழுகைக்காக குளிக்க வேண்டும்) (புகாரி 1926, 1930, 1932) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்க கூடாது (புகாரி) காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711) தொடர்புடைய பதிவுகள்077 - நோன்பின் சட்டநிலை083 - நோன்பு குறித்த சில முக்கிய குறிப்புகள்நோன்பின் சட்ட திட்டங்கள்-03ரமலானின் பகலில் இஸ்லாத்தை ஏற்றவர் எப்படி நோன்பு நோற்பது? About The Author நிர்வாகி See author's posts Share this:WhatsAppFacebookTwitterEmailPrintTelegramLike this:Like Loading...மற்றவர்களுக்கு அனுப்ப... Post navigation தக்க காரணமின்றி நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்